வார்த்தைகளின் சக்தி

ஒரு வார்த்தை வெறும் ஓர் ஒலி அல்ல. இதற்கு அர்த்தமும் உண்டு — தொல்காப்பியர்  எழுத்து, சொல், பொருள் என்று கூறியது போல.

அர்த்தம் என்றால் என்ன?

ஒருவர் “நேர்மை” என்ற வார்த்தையைச் சொன்னால் உங்கள் மனதில் என்னென்ன நடக்கிறது?

 உங்களுக்குத் தெரிந்த சில நேர்மையானவர்களின் படிமங்கள் உங்கள் மனதில் தோன்றுகின்றன. அந்த படிமங்களுடன் இணைந்த இனிமையான உணர்வுகளும், அனுபவங்களும் மனதில் எங்கோ ஆழத்தில் தோன்றி அங்கு நேர்மறை உள்ளுணர்வுகளைத் (positive feelings) தோற்றுவிக்கின்றன . அதே போல எதிர்மறையான ஒரு வார்த்தையைக் கேட்கும்போது எதிர்மறையான உள்ளுணர்வுகள் மனதில் தோன்றுகின்றன.

“நாளை காலையில் சீக்கிரமாக எழுந்து உடற்பயிற்சி செய்வேன்” என்று சொல்வதற்கும் “நாளைக்கு தாமதமாக எழுந்திருக்க மாட்டேன்” என்று சொல்வதற்கும் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

இரண்டாவது வாக்கியத்தின் அர்த்தத்தில் ஒரு சிறிய எதிர்மறை சாயல் இருக்கிறது. முதலாவது வாக்கியம் ‘சீக்கிரமாக எழுந்திருக்கும்’ நேர்மறை பிம்பத்தை நம் மனத்திரையின் மீது வீசுகிறது. ஆனால், இரண்டாவது வாக்கியமோ ‘தாமதமாக எழுந்திருக்கும்’ எதிர்மறை சாயலைக் கொண்டுள்ளது. நாம் அந்த வித்தியாசத்தை தெளிவாக உணரவில்லையானாலும் அது ஆழமனதைப் பாதிக்கும்.

வார்த்தைகள் வெறும் ஒலி அல்ல. அவை மின்னூட்ட அணுக்களைப் போல (charged particles). நமது மனதை எப்படிப்பட்ட வார்த்தைகளுடன் நிரப்புகிறோமோ அவ்வாறே மாறுகிறோம். தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளாலா? சோகமும் தளர்ச்சியும் விளைவிக்கும் வார்த்தைகளாலா?

Advertisements

என்னுடன் இணைந்து செயல்படுங்கள்

கடந்த பல ஆண்டுகளில் கற்றுக் கொண்ட விஷங்களை மற்றவர்களுடன், அதுவும் குறிப்பாக இளைய தலைமுறையினருடன், பகிரந்துகொள்ள விரும்புகிறேன். ஒருவேளை ஓர் இளைஞர் அல்லது இளைஞி என்னுடன் உரையாடி பயன்பெறலாம் என்ற எண்ணத்தில் இனிமேல் இந்தத் தளத்தில்  நிறைய எழுதப் போகிறேன்.

என்னுடன் உரையாட விரும்புபவர்கள் என்னை  dogratamil@gmail.com என்னும் எனது இ-மெயில் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 9840093148 என்ற என் தொலைபேசி மூலம் என்னுடன் நேரடியாகப் பேசலாம்.

அனைவரும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் மாற ஒன்றாக இணைந்து செயல்படுவோம். நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வோம்.

மனச் சக்தி

இது புதியது

“தியானம்” என்ற இந்த வலைப்பூவின் பெயரைப் பார்ப்பவர்கள் இதன் பக்கங்களில் தியானம் செய்யும் முறைகளை பற்றி எழுதியிருப்பேன் என்று எதிர்பார்ப்பது நியாயம். ஒரு தருணத்திற்கு பிறகு அப்படி எழுத தான் உத்தேசித்துள்ளேன். ஆனால் தியான முறைகளை விளக்கிய நம் முன்னோர்கள் தியான நிலைக்கு போகுமுன் சுய கட்டுப்பாட்டின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்கள். அஷடாங்க யோக எனப்படும் எட்டு-நிலை யோக முறையில் மனதளவில் செய்யப்படும் தாரண-தியான-சமாதி ஆகிய மூன்று பயிற்சிகளுக்கு போகுமுன் கீழ் கண்ட ஐந்து பயிற்சிகள் அவசியம்:

1. யம்: நெறிமுறைகளை கடைப்பிடித்து ஒழுக்கமான வாழ்க்கை முறையை பின்பற்றல்.
2. நியம்: உடலையும், மனதையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தூய்மையான வாழ்க்கை வாழ்வது.
3. ஆஸன்: உடல் பயிற்சி மூலம் வியாதிகளை தவிர்த்து நலமாக இருத்தல்.
4. ப்ராணாயாம்: சுவாசத்தை கட்டுப்படுத்தி உடலுக்கும் மூளைக்கும் கூடுதலான செயல்-சக்தியை ஏற்படுத்தல்.
5. ப்ரத்தியாஹார்: ஐம்புலன்களை கட்டுப்படுத்தல்.

இந்த ஐந்து உடல் சம்பந்தமான பயிற்சிகளை செய்த பிறகு தான் மனதளவில் செய்யக்கூடிய தாரண-தியான-சமாதி ஆகிய மூன்று பயிற்சிகள் ஆரம்பிப்பது அஷடாங்க யோக முறை ஆகும்.

யோக ஸூத்ர என்னும் புத்தகத்தில் மஹரிஷி பாதஞ்சிலி இரண்டாவது ஸூத்திரத்தில் யோக என்பதை இவ்வாறு வரையறுத்தியுள்ளார்:

யோகச் சித்த வ்ரித்தி நிரோதஹ்

அதாவது யோக என்பது சித்தத்தின் போக்குகளை நிறுத்துவதே ஆகும்.

சித்தத்தின் ஐந்து வகை போக்குகள் யாவை என்பதை மஹரிஷி இவ்வாறு வர்ணிக்கிறார்:

ப்ரமாண விபர்ய விகல்ப் நித்ரா ஸ்ம்ரிதயா

ப்ரமாண என்பது ஐம்புலன்கள் மூலம் நம் சித்தத்திற்கு தொடர்ந்து நரம்புகள் மூலம் செல்லும் செய்திகள்.
விபர்ய என்பது எது இருக்கிறதோ அதற்கு மாறாக நம் சித்தத்திற்கு செல்லும் செய்திகள்.
விகல்ப் என்பது இல்லாத பொருட்களை வெறும் கற்பனையால் பார்ப்பது.
நித்ரா என்பது தூக்கம்.
ஸ்ம்ரிதயா என்பது ஞாபகங்கள் நம் சித்தத்திற்குள் ஒரு நனவுநிலை ஓட்டமாக வருவது.

இவ்வைந்து வகை போக்குகள் நம் சித்தத்தை பாதிப்பதால் அவற்றின் தாக்கத்தில் சித்தம் அந்த அந்த போக்கின் பிரதிபலிப்பாக இருக்கிறது. இவ்வைந்து வகை போக்குகளை நிறுத்திவிடும்போது சித்தம் அனைத்தையும் தெரிந்துகொள்ளும் சக்தியுடைய ஒரு தீர்க்கதரிசியாக மாறுகிறது. இதை பாதஞ்சிலி இவ்வாறு வர்ணிக்கிறார்:

ததா த்ரஷ்ட்டுஹ் ஸ்வரூபே அவஸ்த்தானம்
வ்ரித்தி ஸாரூப்யம் இதரத்ர

அதாவது சித்தத்தின் போக்குகள் நின்றுவிடும் நிலையில் மனிதனுக்குள் வசிக்கும் தீர்க்கதரிசி தன் நிஜ ரூபத்தை அடைந்துவிடுகிறான். மற்ற நேரங்களில், அதாவது போக்குகள் நிறுத்தப்படாத நிலையில் சித்தம் அந்த அந்த போக்கின்படி செயல்படுகிறது.

சித்தத்தின் போக்குகளை நிறுத்த வேண்டும் என்றால் நமக்கு ஐம்புலன்கள் மீதும் நமது நனவுநிலை ஓட்டத்தின் மீதும் முழு ஆளுமை வேண்டும். அதற்காகத்தான் யம்-நியம் போன்ற பயிற்சிகள் தேவைப்படுகின்றன. அத்துடன் உடல் நலம் சீராக இருந்தால்தான் மூளையும் நரம்புகளும் சரிவர செயல்படும் என்பதற்காக உடல் நலத்தை பராமரிக்க யோக ஆஸ்னங்களும் அஷ்டாங்க யோகாவின் பாகமாக சேர்க்கப்பட்டுள்ளன.

மாறி வரும் இன்றைய காலத்தில் நம் முன்னோர்கள் சொல்லித் தந்த முறையில் யம்-நியம் ஆகியவற்றை செய்வது சுலபமான காரியம் அல்ல. நம் முன்னோர்கள் காடுகளுக்குச் சென்று உலகத்தைத் துறந்து ஆண்மீக சாதனைகள் செய்யவும் கடவுளை அடையவும் ஐம்புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள். அது வேறு கண்ணோட்டம். உலகப்பற்று ஆண்மீக நாட்டத்துக்கு இடைஞ்சல் என்று நினைத்தவர்கள் அவர்கள். அதனால், ஆண்மீக ஈடுபாடு ஆரம்பிக்குமுன் உலகப்பற்றை முழுமையாக விட்டுவிடுவது அவசியம் என்று நினைத்தார்கள். ஆகவே தான் யம்-நியம்.

இன்றைய உலகத்தில் பெரும்பாளானோர் தியான முறைகளை இவ்வுலகத்தில் வெற்றிப் பெற்றுத் தம் வாழ்க்கை முறையை மேம்படுத்தவே பயன்படுத்த விரும்புகிறார்கள். அதாவது தியானமும் இதர பயிற்சிகளும் இந்த உலகத்தின் இன்பங்களை ரசிக்க அவர்களை உதவ வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. ஆகவே நமது முன்னோர்கள் தந்துள்ள யம்-நியம் முறைகளின் மூலம் கிடைக்கும் பலன்களை வேறு முறையில் பெற வேண்டியது அவசியமாகிறது.

இந்த வலைபூவில் நான் படிப்படியாக தற்கால உளவியல் முறைகளையும், முன்கால தியான முறைகளையும் பயன்படுத்தி எவ்வாறு நம் மனதின் முழு சக்தியைப் பயன்படுத்த முடியும் என்பதை விளக்க விரும்புகிறேன்.

உங்களுக்கு நான் சொல்வதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலோ, நீங்கள் மேற்கொண்டு விள்ளக்கங்கள் கேட்க விரும்பினாலோ என்னை அணுக என் மின்னஞ்சல் முகவரி dogratamil@gmail.com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம்.